எஸ்.எஸ்.ராஜேந்திரன் 
கட்டுரை

“பேசாம மாட்டுக்கு வைக்கோல் வாங்கிப் போட்டிருக்கலாம்”

நாற்காலிக்கனவுகள்

அகில்

இந்தியாவிலேயே அரசியலுக்குள் நுழைந்து  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலில் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் ‘லட்சிய நடிகர்' என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டவரான எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

1962 ஆம் ஆண்டு தேனி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான இவர் அடுத்து  மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ்.ஆர் அப்போது  அ.தி.மு.க.வில் இருந்தார். ஆனால் எம்.ஜி.ஆரோ மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார்.

1962 ஆம் ஆண்டு தேனி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான இவர் அடுத்து  மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ்.ஆர் அப்போது  அ.தி.மு.க.வில் இருந்தார். ஆனால் எம்.ஜி.ஆரோ மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார்.

1984 சட்டமன்றத் தேர்தல் நேரம். போட்டியிட வாய்ப்புக் கேட்டார்.சீட் கிடைக்கவில்லை. பார்த்தார். எம்.ஜி.ஆர் - எஸ்.எஸ்.ஆர் கழகம் என்று நம்பிக்கையோடு தனிக்கட்சியைத் துவக்கி சேடபட்டி தொகுதியில் போட்டியிட்டார்.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட அவரைப் பிரச்சாரத்தின் போது பார்த்தபோது, மேக்கப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தார்.

‘‘இது என்னோட சொந்தத் தொகுதி. இதுவரை என்னை ஜெயிக்க வைச்ச மக்கள் என்னை வெற்றிபெற வைக்க மாட்டார்களா?''- கரகரப்பான குரலில் பேசியபடி பிரச்சாரத்திற்குக் கிளம்பிய அவர் மிகவும் நம்பிய தொகுதியில் தோற்றுப் போனார்.

............

‘உன்னால் முடியும் தம்பி' பாலசந்தர் இயக்கி கமல் நடித்த படத்திற்கான ஆதர்ச நாயகன் எம்.எஸ்.உதயமூர்த்தி. அமெரிக்காவிலிருந்த படியே தன்னம்பிக்கையூட்டும் நூல்களை எழுதிக் கொண்டிருந்த உதயமூர்த்தி சென்னைக்குத் திரும்பி 1988 இல் ஆரம்பித்த இயக்கம் ‘மக்கள் சக்தி இயக்கம்.' ( கொஞ்சம் மக்கள் நீதி மய்யத்தின் ஜாடை தெரிகிறதா?')

எம்.எஸ் உதயமூர்த்தி

1996 ல் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தித் தானும் ஒருவராகக் களம் இறங்கினார். நம்பிக்கையாகப் பிரச்சாரம் செய்தார்.

ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் அவரைத் தேர்தலுக்குப் பிறகு வீட்டில் பார்த்தபோது சலிப்போடு சொன்னார். ‘' இங்குள்ள மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.''

இவர் எழுதிய தன்னம்பிக்கை நூல் ஒன்றின் தலைப்பு. ‘ நீ தான் தம்பி முதலமைச்சர்'. புத்தகம் மட்டுமே விற்றது.!

.......................................

எண்பதுகளில் டிராபிக் ராமசாமி மாதிரி அடிக்கடி பேப்பர்களில் அடிபட்ட பெயர் ‘பறக்கும் படை சீனிவாசன்.' சென்னையில் தான் குடியிருந்த பகுதியில் என்ன பிரச்சினை என்றாலும் முன்னணியில் நிற்பார். சண்டை போடுவார். தீர்த்துவைப்பார். அப்படிப்பட்டவருக்கும் தேர்தல் ஆசை வந்துவிட்டது.

நின்றார். பிரச்சாரம் செய்தார். அதிர்ச்சியாகிவிட்டார். அவருடைய தெருக்காரர்களே ஓட்டுப் போடவில்லை. ரிசல்ட் வந்து அதிர்ச்சி மாறாத மனநிலையில் வீட்டில் இருந்தவரை ஆங்கில இதழுக்காகப் பேட்டி காணப் போனபோது பனியன் சகிதமாக காலை மடித்து உட்கார்ந்திருந்தவர் கோபமாக என்னைப் பார்த்துச் சொன்னார்.

‘‘போங்க..சார்.. இந்த ஜனங்களுக்காக எவ்வளவு தூரம் உழைச்சிருக்கேன்.. அதுக்கு என்ன பதில் கொடுத்திருக்காங்க..பார்த்தீங்களா? அதுக்குப் பேசாம மாட்டுக்கு வைக்கோல் வாங்கிப் போட்டிருக்கலாம்..சார்..''

அசை போடச் சிரமமான விஷயம்தான்!

ஏப்ரல், 2018.